Sunday 5 August 2012


நம்பினால் நம்புங்கள்
(கர்னல் சே காந்தி)

எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தை
நாங்கள் இல்லாத வேளையில்
நோட்டமிட்ட புறா ஒன்று
நிம்மதியாகத் தங்கிவிடத் தீர்மானித்தது.
அனுமதி பெறாமல் புறா தங்கினாலும்
அத்துமீறிய சொத்து ஆக்கிரமிப்பு வழக்கில்
வழக்கு மன்றத்திற்கு இழுக்க
விருப்பம் எங்களுக்கு இல்லை.
வழக்குத் தொடுத்தாலும் தீர்ப்பு
எங்கள் வாழ்நாளில் கிடைக்கும்
என்ற நம்பிக்கை இல்லை என்பது வேறு..
எதிர்கட்சியைச் சார்ந்தது அல்ல புறா
என்பதனால் ஆளும் கட்சி சிறைக்கனுப்பாது.
எனவே புறா எங்கள் வீட்டில்
நிம்மதியோடு வாழத் தொடங்கியது.

விசா இல்லாமல் வேறு நாடுகளிலிருந்து
விருந்தினர் போல் வரும் பறவைகளை
எற்றுக்கொள்ளும் இதயம் கொண்டவர்கள்
நம்மை அண்டி வாழும் நம்மூர் புறாக்களுக்கு
நலந்தர வேண்டாமா?.

ஒரு வாரம் தங்கிய அந்தப் பெண் புறா
எங்களின் சமாதானப் போக்கை அறிந்தபின்
தனது பிரசவத்தை இங்கு நடத்தத் தீர்மானித்து
இரண்டு முட்டைகளை  இட்டது மேஜைமீது.
இட்ட முட்டைகள் இடம்பெயராமல் இருக்க
எச்சரிக்கையுடன் சுல்லிகளால் குச்சிகளால்
முட்டைகளைச் சுற்றித் தடுப்புச் சுவரெழுப்பியது.





பொறியியல் பயிலாத புறா
பொறிக்கப்போகும் முட்டைகளை
விழாமல் பாதுகாத்ததை எண்ணி
வியந்தே போனோம்.
எங்கள் செல்லப் புறா
பணத்தைக் கொடுத்துப்
பல்கலைக் கழகத்தில்
பட்டம் பெறவில்லை போலும்.
போலிப் படிப்பிற்குப் பின்னால்
நம்மூர் வாசிகள் போல்
புறா செல்லவில்லை.
அறிவுதான் தேவை .பட்டம் அல்ல
என்பது புறாவின் சித்தாந்தம்.

திணமும் முட்டைகளைப் புறா
அடை காக்க ஆரம்பித்தது
தாழ்வாரத்தில் நாங்கள் நடந்து சென்றால்
தயக்கம் கலந்த அச்சத்துடன்
புறா வெளியில் செல்லும்.
புறாவின் நலன் கருதி நாங்களும்
தாழ்வாரத்திற்குத்
தயங்கியே செல்ல ஆரம்பித்தோம்.
திணமும் புறாவிற்கு
உணவும், நீரும் அளித்தோம்.
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் முட்டையினின்று
ஒரு குஞ்சு வெளிப்பட்ட்து.
குஞ்சுவின் விழிகள் மூடியிருந்தன.
இன்னுமொரு முட்டையினின்று
அடுத்த நாளில் சகோதரக் குஞ்சு
வெளியில் வந்தது.
புறாக்குஞ்சுகள் எங்கள்
பேரப்பிள்ளைகள் ஆயின.
பேரக்குஞ்சுகள் தாயின்
அரவணைப்பில் வளர்ந்தன
சாளரம் வழியே அவ்வப்போது
புறாக்களைப் பார்த்து மகிழ்ந்தோம்.
குஞ்சுகளைக் கால்களுக்கிடையில் படுக்க வைத்துக்
காவல் புரிந்தது தாய்ப்புறா.
எங்களைப் பார்த்தவுடன்
பறந்து சென்ற புறா
இப்போது அதன்
பக்கத்தில் சென்றாலும் பறப்பதில்லை.
எங்கள் மீதுள்ள நம்பிக்கையா?
நாங்கள் சாகபட்சிணிகள் என்பது
தாய்ப்புறாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
வளர்த்த ஆட்டை வெட்டித்திண்ணும்
தந்திர மனித வர்க்கத்தைத்
தாய்ப்புறா தெரிந்திருக்க வேண்டும்.
இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாட்டைப் புறா அறியாதா?
இப்போதெல்லாம் சிபிச்சக்கரவர்த்தி பிறப்பதில்லை
என்பதைப் புறா தெரிந்திருக்க வேண்டாமா?
எங்களோடு புறா ஏன் நெருங்கி வாழ்ந்தது?





எங்கள் வீட்டில் வாழும் புறா
இரக்கமின்றிக் குப்பைத் தொட்டியில்
எறியப்படும்  குழந்தைகளின்
கொடிய தாய் குலத்தைச் சார்ந்ததல்ல
எம்முயிர் போயினும் பரவாயில்லை
விழி திறவா குஞ்சுகளை
விட்டு விட்டு ஓட மாட்டேன்
வாழ்ந்தாலும் குஞ்சுகளோடுதான் அன்றி
வீழ்ந்தாலும்  குஞ்சுகளோடுதான் என்பது
தாய்ப்புறாவின் மன உறுதிப்பாடு.
ஆவி சுமந்து பெற்ற
அருமைந்தன் உயிர்காக்கக்
கொல்படை முன் கோபித்த
பாரதி தாசன் படைத்த
பண்பாடுடையது இந்தத் தாய்ப்புறா.

நாட்கள் பல நகர்ந்தன வழக்கம் போல
குஞ்சுகள் விழிகள் திறந்தன.
வானைப் பார்த்தன. நடை பயின்றன.
சிறகை விரித்தன .சிறது தூரம் பறந்து செல்லப்
பயிற்சிகள் செய்தன. தாயுடன் மழழை பேசின.
ஒரு நாள்  வீட்டை விட்டு வெளியில் சென்றன.
பேரக்குக்குஞ்சுகள் விண் பெருவெளியில்
பறப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தோம்.





இந்த வானம் ஒரு தடையல்ல.
உலகை வலம் வாருங்கள்.
போர்மேகங்களால் குண்டு மழை
பொழிந்து குழந்தைகள் அனாதையாகும் போழ்து
தீவிரவாதம் கோரத்தாண்டவம் ஆடியதால்
குலவிளக்குகள் விதவையாகும் போழ்து
மதவெறி மட்டுக்கடங்காததால் மழலையர்தம்
முதுகெழும்புகள் முறிக்கப்படும்போழ்து
சமாதானத்தூது செல்லுங்கள்.
போரிடும் நாட்டில் புத்த தேவனின்
பொன்னுரையைப் பேசுங்கள்
பளிச்சிடும் விண்மீனை  அலகால் கொத்தி
வெளிச்சம் தந்திட எடுத்து வாருங்கள்
மானிடமும் பயனுறுமென்று
வாழ்த்தி மகிழ்ந்தோம்.



புறாக்கள் தினம் தினம்
பிறந்த வீட்டை வலம் வருகின்றன.
பிறந்த வீட்டில்தான் நல்லுணவு கிடைக்கும் என்பது
புறாக்களுக்குத் தெரியும் போலும்.
குடும்ப அட்டையில்
இடம்பெறா விடினும்
விரிந்த எங்கள் குடும்பத்தில்
பிரிக்கமுடியாத உறுப்பினர்கள்
இந்தப் புறாக்கூட்டம்.
பேரக்குஞ்சுகளின் வளர்ச்சியைப்
பார்த்துப் பெருமை யுறுகின்றோம்.
எங்கள் பாரதி பாடியது முற்றிலும் உண்மை.
காக்கை குருவி எங்கள் சாதி.
கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
நம்பினால் நம்புங்கள்.